சனி, 21 ஆகஸ்ட், 2010

காலம் 
வரைந்த ஓவியத்தின் விளிம்புகளில், 
இன்னும் 
உன் நினைவுகள், 
சிதைந்து போன சுவடுகளாய்.. 

கற்களில் 
செதுக்கிய சிற்பங்களின், 
உடைந்து எஞ்சிய பாகங்களாய்.. 

நரைத்துவிட்ட தலை முடியின், 
கருமை மிஞ்சிய சோகங்களாய்.. 

இதயவரையின் மெல்லிய சுவர்களுக்குள், 
இன்றுவரை உயிரோடுள்ளது.. 

உனையே 
எண்ணி வாழ்ந்த தருணங்கள் கழிந்து, 
உன்னை 
எண்ணி வாழ்ந்த நிமிடங்கள் தொலைந்து, 
உன்னையும் எண்ணி வாழும் வாழ்க்கையாயிற்று... 

பாதங்கள் கொண்டு செல்லும் பாதை 
என் விதியாயிற்று.. 
சோகங்களே பாதங்களுக்குப் பாதணியாயிற்று.. 
உன் 
நினைவுகளே ஓய்வெடுக்கும் மர நிழலாயிற்று.. 

உனைக் காணவே உறங்கிய நாட்களுக்குப் பஞ்சமில்லை. 
உனக்கெனவே எழுதிய கவி வரிகளுக்கு எல்லை இல்லை. 

உன் 
நினைவுகள் 
என்னில் ஓய்வெடுக்கும் போது, 
என் 
மூச்சும் என்னிடம் ஓய்வூதியம் பெற்றுவிடும். 
இது உனை எண்ணி வாழும், 
உப்பற்ற வாழ்வாயினும்... 
உனக்காகவே வாழ்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக