வெள்ளி, 17 டிசம்பர், 2010


நீயில்லையென்றால்.......

காற்றுச் சுடும்
விழிகலோடு முரண் பட்டு
தூக்கம் வெளிநடப்புச் செய்யும்

உன் கடித வரிகளை
மேய்ந்து மேய்ந்தே
ஆயுளில் பாதி தேய்ந்து போகும்

நீயில்லையென்றால்
என் கவிதைகளெல்லாம்
அப்போ
இறந்தே பிறக்கும்

பசியை துக்கமும்
சந்தோஷங்களை தனிமையும்
துரத்திக் கொண்டேயிருக்கும்

உன் சிரிப்புக்களை
கனவுகளாய் சேமித்து வைத்த
இதயம்
அதை கண்ணீர் பூக்களாய்
செலவு செய்யும்

சந்தோஷம் என்பது – அப்போ
என் கடந்து போன
பக்கங்களில் மட்டுமே
எழுதப்பட்டிருக்கும்

வாழ்க்கை
உன் நினைவுகளாய் இருக்கும்
நெஞ்சு,
நினைவுகளோடு மட்டுமே
குடும்பம் நடத்திப் பார்க்கும்

நிலா கூட
ஒளியை
என்னை தவிர்த்து
பொழிவதாகவே படும் எனக்கு

ஜீவிதம் தூரமாகும்
இறப்பு மட்டும்
என்னை
சில இமைத்துடிப்பின் இடைவெளிகளில்
காத்துக்கிடக்கும்

நீயில்லையென்றால்
அறிவு
இரண்டும் இரண்டும் ஆறு என்று
தப்புத் தப்பாய் கணக்குப்போடும்

வானம் கீழிறங்கும்
ஆணலை பெண்ணலையை
விரட்டிப்பிடிக்கும்
ஒளியிழந்த சூரியன்
விறகடுப்பில் குளிர்காயும்

இன்னும்
எதுவெதுவோ நடந்து போகும்……
நீயில்லையென்றால்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக