சனி, 8 மே, 2010

இன்றோ நாளையோ
இறக்கவிருக்கும் மரங்களில்
இளமையோடு துளிர்க்கும்
மலர் சிசுக்களாய்...
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்
விடை தெரியா கேள்விகளோடும்
என் காதல்,

தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை...

அந்த மரத்தில் தானே
செதுக்கினோம்
உன் பெயரை நானும்...
என் பெயரை நீயும்...?

எம்மைப் போலவே- காலம்
மரத்தையும் விட்டுவைத்தில்லை
நரைத்த தலையுடன்
நின்றிருக்கிறது.

புதுப்புது காதல் தடங்களை
தாங்கியிருக்கிறது
படுத்துறங்கிய புல்வெளி!

இந்த இடத்தில் தானே
கைக்கோர்த்து நடைபயின்றோம் ?
ஆமாம்!
இதே இடம் தான்!

இருமருங்கிலும் எழுந்து நின்று
நிழல் பாய் விரித்து
காதலர்களை வரவேற்கும்
பெயர் தெரியா இம்மரங்கள்
"அவள் எங்கே?"
உன்னை தான் விசாரிக்கின்றன

இந்த மரங்களுக்கு
நினைவிருக்கும் நம் காதல்
உனக்கு நினைவிருக்குமோ?


என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்
அந்த மரங்களின் கேள்விக்காவது
விடை சொல்
"நீ எங்கே இருக்கிறாய்?"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக